கோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
திண்டுக்கல் அருகே கோர்ட்டு ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் குணசீலன் (வயது 34). இவர், ஆத்தூர் கோர்ட்டில் அமீனாவாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி (31). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், திண்டுக்கல்லை அடுத்த ஏர்போர்ட் நகரில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை குணசீலன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம், வெள்ளிக்கொலுசு, செல்போன், உண்டியல் ஆகியவை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
குணசீலன் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.