பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-26 21:35 GMT

பாளையங்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

துறைமுக ஊழியர்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் டார்லிங் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 62). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 14-ந் தேதி சென்னையில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக சென்றார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சோ்ந்தவர்கள் மகாராஜனை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று காலையில் ஊருக்கு திரும்பினார்.

நகைகள் கொள்ளை

அப்போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 2 தங்க சங்கிலிகள், தங்க மோதிரம், தங்க காசுகள் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டார்லிங் நகர் 6-வது குறுக்கு தெருவில் முகமது உசேன் மனைவி ஜெசிமா என்பவர் ஊருக்கு சென்றதை அறிந்த மர்மநபர் அவரது வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்கள், போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்