3 வீடுகளில் நகைகள்-பணம் திருட்டு

காட்டுப்புத்தூர், அரியமங்கலம், துவரங்குறிச்சி பகுதிகளில் 3 வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-12 19:53 GMT

காட்டுப்புத்தூர், அரியமங்கலம், துவரங்குறிச்சி பகுதிகளில் 3 வீடுகளில் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குலதெய்வ கோவில்

காட்டுப்புத்தூர் அருகே உள்ள கவரப்பட்டி குயவர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 40). இவரது மனைவி சரஸ்வதி (37). சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் குலதெய்வ கோவிலுக்கு சென்றார். வீட்டில் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது வீட்டுக்கு வந்த பெண் உள்பட 3 பேர் ஆதரவற்ற இல்லத்திற்கு உதவி கேட்டு வந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து சரஸ்வதி, கணவர் வீட்டில் இல்லை நீங்கள் செல்லுங்கள் என கூறிவிட்டு மாட்டுகொட்டகையில் உள்ள மாட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றார். இதனிடையே அந்த ஆசாமிகள் சரஸ்வதிக்கு தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து 6½ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர். இதனையடுத்து மாட்டுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்த சரஸ்வதி பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ேமலும் நகைகள்-பணம் திருடப்பட்டது குறித்தும் கணவருக்கு தெரிவித்தார். பின்னர் கோவிலுக்கு சென்ற பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

அரியமங்கலம்

அரியமங்கலம் அருகே உள்ள கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மஞ்சுளா (46). இவர் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உள்ள கோவிலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் வீ்ட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமி சாவியை எடுத்து வீட்டை திறந்து, உள்ளே சென்று மோதிரங்கள், தங்க காசு உள்பட 5 கிராம் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

துவரங்குறிச்சி

துவரங்குறிச்சி அருகே உள்ள துலுக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (60). இவர் பாலக்கரையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது, இவர் திருச்சி காஜாமலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் துலுக்கம்பட்டியில் வசிப்பதற்காக புதிதாக வீடுகட்டி பொருட்களை வைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி வந்து விட்டார். நேற்று முன்தினம் மீண்டும் துலுக்கம்பட்டி வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தார்.

அப்போது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, ரூ.5 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்