ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் நகை வியாபாரிகள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-28 17:19 GMT

தமிழ்நாடு அனைத்து நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில்  நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினாா். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கன்னிலால், பாண்டுரங்கன், பாலமுருகன், பிரேம்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் ரத்தின ராமநாதன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு‌ சங்க கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் தங்க நகைகளுக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதால் சிறு நகை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 2 சதவீதமாக குறைக்க வேண்டும். காவல் துறையினர் வழக்குகளில் நேரடியாக நகை வியாபாரிகளை கைது செய்வதை தவிர்த்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போலியான விளம்பரங்கள் கொடுத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற நகைகள் விற்பனை செய்யும் நகைக் கடையினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்க சட்ட ஆலோசகர் ரங்கநாதன், துணை தலைவர் அகர்சந்த் ஜெயின் உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை ரமேஷ் ஒருங்கிணைந்தார். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்