கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.7 லட்சம் நகை திருட்டு

வந்தவாசி அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-11-02 13:25 GMT

வந்தவாசி அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 32), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பரிமளா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு குழந்தை பிறந்ததால், உளுந்தை கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கோகுலக்கண்ணன் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தையை பார்க்க உளுந்தை கிராமத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மருதாடு கிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

20 பவுன் நகை திருட்டு

உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்து பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோக்களில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து கோகுலகண்ணன் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்