தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

பண்ருட்டி அருகே நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-04-27 18:45 GMT

புதுப்பேட்டை

கதவை உடைத்த மர்மநபர்கள்

பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 30). இவரது மனைவி சந்தியா(23). அருள்பாண்டியன், வெளிநாட்டில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதனால் சந்தியா, தனது மாமியாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தியாவும், அவரது மாமியாரும் வீட்டில் உள்ள தனித்தனி அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் சந்தியாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். மேலும் வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தையும் காணவில்லை.

3 பவுன் நகை

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடியதும், அதன் பிறகு தூங்கிக் கொண்டிருந்த சந்தியாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தடயங்கள் சேகரிப்பு

இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து பின்புறம் வழியாக சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்