ஜே.இ.இ. தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றிகலெக்டரிடம் நேரில் வாழ்த்து
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா செங்கரை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2022-2023-ம் ஆண்டில் 276 மாணவர்கள், 108 மாணவிகள் என மொத்தம் 384 மாணவ, மாணவிகள் பயின்று உள்ளனர். இங்கு சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான பழங்குடியின மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். குறிப்பாக பிளஸ்-2 கணித உயிரியியல் பிரிவில் 17 மாணவ, மாணவிகள் பயின்றனர்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இந்த பள்ளி பெற்றது. முள்ளுக்குறிச்சியை சேர்ந்த விவசாய தம்பதியான முத்துசாமி, சசிகலா ஆகியோரின் மகள் பூமிகா பிளஸ்-2 இதே பள்ளியில் கணித உயிரியியல் பாடப்பிரிவில் பயின்று பொதுத்தேர்வில் 600-க்கு 430 மதிப்பெண்களை பெற்றார். அதேபோல் கொல்லிமலை எடப்புளிநாடு செங்கரையை சேர்ந்த மாணவன் ஹரிஹரன் 600-க்கு 452 மதிப்பெண்கள் பெற்றார். இந்த நிலையில் மாணவர்கள் பூமிகா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் தற்போது நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு தேர்வாகிஉள்ளனர்.
அதனால் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா மாணவர்கள் பூமிகா, ஹரிஹரனை நேரில் அழைத்து ஊக்குவித்து, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.