ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் வழக்கு: முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு

போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக வசீகரன் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.

Update: 2024-01-20 12:08 GMT

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை உட்பட 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது.

இந்தத் தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36.9 கோடி ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கடந்த 2020ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருவதாகவும், கொரோனா காலக்கட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, மக்கள் வரிப் பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வேதா இல்லம் தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், வேதா இல்லத்திற்காக தமிழக அரசு செலுத்திய தொகையை திரும்ப பெறவும், அதனை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த தொகையை திருப்பி செலுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த தொகை, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ரூபாயாக சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தொடர்ந்த வழக்கை இன்று சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்