மஞ்சள் காமாலையும் பரவுகிறது: மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

Update: 2023-09-21 21:44 GMT


மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

டெங்கு காய்ச்சல்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அவற்றை தடுக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், மதுரை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மதுரையை சுற்றி உள்ள பல பகுதிகளை சேர்ந்த 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். இதுபோல், காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

பெண் சாவு

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 30 வயது பெண் ஒருவர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில் "மதுரையில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல், மஞ்சள் காமாலையும் வேகமாக பரவுகிறது. மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் நடந்து வந்தாலும், டெங்கு அதிவேகமாக பரவி வருகிறது. இதில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சூடான நீரை பருக வேண்டும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மதுரையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மழை நீர் வீடுகள் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் தேங்காத வண்ணமும், டெங்கு கொசு புழுக்கள் வளராத வண்ணமும் கண்காணிக்க வேண்டும். என்னத்தான் அதிகாரிகள் முயற்சி செய்தாலும், பொதுமக்களும் அலட்சியம் காட்டாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்