சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1470-க்கு விற்பனை; ஒரே நாளில் ரூ.525 உயர்ந்தது

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.525 உயர்ந்து ரூ.1,470-க்கு விற்பனையானது.

Update: 2023-09-16 21:50 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.525 உயர்ந்து ரூ.1,470-க்கு விற்பனையானது.

பூக்கள் ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1470-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.46-க்கும், பட்டுப்பூ ரூ.95-க்கும், சாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும் ஏலம் போனது.

மல்லிகைப்பூ விலை உயர்வு

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.945-க்கும், முல்லை ரூ.340-க்கும், காக்கடா ரூ.400-க்கும் விற்பனையானது. இதனால் நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.525-ம், முல்லைப்பூ ரூ.460-ம், காக்கடா ரூ.250-ம் அதிகரித்து விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'பூ மார்க்கெட்டுக்கு இன்று (அதாவது நேற்று) பூக்கள் குறைவாகவே வந்திருந்தன. மேலும் நாளைக்கு (அதாவது இன்று) முகூர்த்த நாள் என்பதால் வியாபாரிகளுக்கு பூ அதிகம் தேவைப்பட்டது. இதனால் அதிக ஏலம் கூறி எடுத்துச் சென்றார்கள். இது தவிர இந்த பகுதியில் சில நாட்களாக வெயில் கொளுத்தி வருவதால் பூக்களுடைய வரத்தும் குறைந்துவிட்டது' என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்