திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500 ஆக உயர்வு
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்கப்படுகிறது.
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. திண்டுக்கல்லில் இருந்து மதுரை, நெல்லை, சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுதவிர கேரளாவுக்கும் அதிக அளவில் பூக்கள் ஏற்றுமதியாகிறது.
இந்தநிலையில் கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பூக்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. இதற்கிடையே இரவில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பூக்கள் மலர்வது குறைந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துவிட்டது. அதன்படி நேற்றைய தினம் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் குறைந்த அளவே வந்தன. ஆனால் வழக்கம் போல் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கினர்.
ஆனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதில் மல்லிகைப்பூவை பொறுத்தவரை கிலோ ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்றது. அதேபோல் கனகாம்பரம் ரூ.800-க்கும், முல்லைப்பூ ரூ.750-க்கும், சாதிப்பூ மற்றும் காக்கரட்டான் தலா ரூ.650-க்கும், அரளிப்பூ ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.95-க்கும், செவ்வந்தி மற்றும் மரிக்கொழுந்து தலா ரூ.80-க்கும் விற்பனை ஆனது.