தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடங்கியது

தூத்துக்கடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது

Update: 2023-05-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.

ஜமாபந்தி

கிராம கணக்குகளை சரி பார்க்கும் வகையில் ஆண்டு தோறும் தாலுகா அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் முகாம் (ஜமாபந்தி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. முதல் நாளான நேற்று கீழத்தட்டப்பாறை உள்வட்டத்துக்கு உட்பட்ட உமரிக்கோட்டை, கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம்பண்ணை, தெற்குசிலுக்கன்பட்டி ஆகிய 7 கிராமங்களுக்கான கிராம வருவாய் கணக்குகளை உதவி கலெக்டர் கவுரவ்குமார் தணிக்கை செய்தார்.

23-ந் தேதி வரை

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 52 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 பட்டா மாறுதல் மனுக்கள், 7 உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள், ஒரு முதியோர் உதவித்தொகை ஆகியவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளை உதவி கலெக்டர் வழங்கினார். முகாமில் தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில், மொத்தம் 82 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதில், சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லசாமி மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கு இணையவழி பட்டா உத்தரவும், செங்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி மனைவி அழகம்மாள் என்பவருக்கு நத்தம் பட்டாவுக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

எட்டயபுரம்

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு தனி துணை கலெக்டர் ஜெயா தலைமை வகித்து 36 மனுக்களை பெற்றார். இதில், 2 பட்டா மாறுதல் மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் மல்லிகா, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து தாலுகா அலுவலகங்கள்

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நேற்று ஜமாபந்தி நடந்தது. அந்தந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள வருவாய் கிராமங்களை பொறுத்து வருகிற 26-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான அபுல் காசிம் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட வல்லநாடு உள்வட்ட பகுதிகளான கலியாவூர், ஆழந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிகுடி ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. அப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பட்டா மற்றும் சான்றிதழ்கள் உட்பட பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இன்று(புதன்கிழமை) முறப்பநாடு புதுகிராமம், கீழபுத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம், தெய்வச் செயல்புரம் உள்வட்ட பகுதிகளான செக்காரக்குடி பகுதி -1, மீனாட்சிபுரம் செக்காரக்குடி பகுதி -2, வடக்கு காரசேரி, தெய்வச்செயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், நாளை(வியாழக்கிழமை) செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழவல்லநாடு, நாணல்காடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

வருகிற 19-ந் தேதி செய்துங்கநல்லூர் உள்வட்ட பகுதிகளான விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தாலங்குறிச்சி, செய்துங்கநல்லூர், கருங்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், வல்லகுளம் ஆகிய பகுதிகளுக்கும், வருகிற 23-ந் தேதி கால்வாய் மற்றும் வேலூர் கஸ்பா, வேலூர்ஆதிச்சநல்லூர், தோழப்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீ மூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கும், வருகிற24-ந் தேதி வேளூர்புதுக்குடி, ஸ்ரீபரங்குசநல்லூர், கீழப்பிடாகை, வரதராஜபுரம், திருப்புளியங்குடி, பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குமான ஜமாபந்தி நடைபெறுகிறது. ஜமாபந்தியின் போது குறிப்பிட்ட தேதியில் அந்தந்த கிராம மக்கள் காலை 10மணி முதல் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வு காணலாம் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்