அந்தியூர், கொடுமுடி, தாளவாடி, நம்பியூரில் ஜமாபந்தி முகாம்நலத்திட்ட உதவிகள் கேட்டு பொதுமக்கள் மனு

அந்தியூர், கொடுமுடி, தாளவாடி, நம்பியூரில் நடந்த ஜமாபந்தி முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர்.

Update: 2023-05-26 00:57 GMT

அந்தியூர், கொடுமுடி, தாளவாடி, நம்பியூரில் நடந்த ஜமாபந்தி முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் எழுமாத்துர், ஆனந்தம்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, பழமங்கலம், உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து வந்த மக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.

இதில் பயிற்சி துணை கலெக்டர் காயத்ரி, மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் (நில எடுப்பு) குமார், மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலஅளவை கருவிகளை பார்வையிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷனி சந்திரா ஆய்வு செய்ததுடன், அங்கு மரக்கன்றையும் நட்டு வைத்தார்.

அந்தியூர்

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. முகாமில் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரெங்கநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் அந்தியூர் தாலுகாவுக்குட்பட்ட அம்மாபேட்டை, கன்னப்பள்ளி, இலிப்பிலி, சென்னம்பட்டி, கொமராயனூர், புதூர், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், நெரிஞ்சிபேட்டை, ஆரியகவுண்டனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் வேண்டி, பட்டா வேண்டி, தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு மனுக்களை அளித்தனர். மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 7 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், முருகேசன், தமிழரசன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அந்தியூர், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கராபாளையம், பச்சாம்பாளையம், பூதப்பாடி, ஒட்டபாளையம், பூனாச்சி, முகாசிபுதூர், அட்டவணைப்புதூர், பட்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.

கொடுமுடி

கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி முகாமுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதாயாளர் பழனிக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். மொத்தம் 77 மனுக்கள் பெறப்பட்டன. இதையொட்டி மனுக்கள் கொடுத்த ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் கொடுமுடி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவசங்கர், மண்டல துணை தாசில்தார் முருகேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் சுபாஷினி, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாளவாடி

தாளவாடி தாலுகா அலுவலகத்தில் தனித்துணை கலெக்டர் கோ.குமரன் தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இதில் தாளவாடி வட்டத்தில் உள்ள திகனாரை, கரளவாடி, பைணாபுரம், மாதள்ளி, தலமலை, இக்களூர், நெய்தாளபுரம், ஆசனூர், ஆகிய 19 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவிதொகை, பட்டா மாறுதல் மனுக்கள், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல் நீக்கல் மனுக்கள், வாரிசு சான்றிதழ் உற்பட 77 மனுக்களை வழங்கினர். இதில் 4 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இந்த முகாமில் தாளவாடி தாசில்தார் ரவிசங்கர், மண்டல துணை தாசில்தார் சுகேந்திரன், செந்தில்குமார், நிலவருவாய் ஆய்வாளர் மதிவாணன், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

நம்பியூர்

நம்பியூர் தாலுகாவில் நேற்று நம்பியூர் உள் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமங்களான பொலவபாளையம், எம்மாம்பூண்டி, கோசனம், ஒழலக்கோவில், நம்பியூர் உள்ளிட்ட 10 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நம்பியூர் தாசில்தார் மாலதி தலைமை தாங்கினார்.

முகாமில் உதவி ஆணையாளர் (கலால்) சிவகுமாரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், புதிய ரேஷன் அட்டைக்கான விண்ணப்பம், முதியோர் உதவித்தொகை உள்பட 200-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் கிராம பகுதிகளில் உள்ள காலனி பகுதிகளுக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், அஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள 90 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

முகாமில் சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி, தலைமை இடத்து துணை தாசில்தார் பத்மாகண்ணா, மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், நில வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், நவாப் ஜான், பிரபு, பழனிச்சாமி, தமிழரசன், சுமதி, கலைச்செல்வி, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்