தடங்கத்தில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு: போட்டியை விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்-கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி:
தடங்கத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்று கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா தடங்கம் கிராமத்தில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் இணைந்து முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான அரசின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை அந்தந்த துறை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
மாடு பிடி வீரர்கள்
மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோன்று எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் போட்டியை நடத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களை முன்கூட்டியே தேர்வு செய்து அவர்களை பதிவு செய்ய வேண்டும்.
மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட மாட்டாது. போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இது போன்ற அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ஷகிலா பானு மற்றும் அனைத்து தாசில்தார்கள், விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.