ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என சிவகாசி யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிவகாசி,
ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என சிவகாசி யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
யூனியன் கூட்டம்
சிவகாசி யூனியன் கூட்டம் துணைத்தலைவர் விவேகன்ராஜ் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, தேவஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு அளிக்க தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்கிய செலவு ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்துக்கு ஒப்புதல் பெறுவது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
ஆழ்வார்ராமானுஜம்: வடமலாபுரம் பஞ்சாயத்து பகுதியில் ஜல்ஜீவன் திட்டப்பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் பேவர்பிளாக் பதிக்கும் பணியினை விரைந்து தொடங்க வேண்டும்.
பள்ளி கட்டிடம்
மீனாட்சி சுந்தரி:- வெள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துகுமாரபுரம் பகுதியில் போதிய சாலை, மின் விளக்கு வசதிகள் இல்லை. எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் என்ன பணிகள் நடக்கிறது என்று எனக்கு அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை. 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனை புதுப்பிக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்:- சேதமடைந்த கட்டிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் சேதமடைந்த கட்டிடம் குறித்த தகவல்களை யூனியன் அலுவலகத்தில் தெரிவிக்கவும், அந்த கட்டிடம் புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல் ஜீவன் திட்டம்
சின்னதம்பி:- சிவகாமிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
துணைத்தலைவர்: யூனியன் அலுவலகத்திலும், திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் யூனியனுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதிலும் புதிய வணிக வளாகம் கட்டி யூனியன் வருவாய் பெருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.