ஊட்டியில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஊட்டியில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-04-04 18:45 GMT

ஊட்டி

மகாவீர் ஜெயந்தியையொட்டி ஊட்டியில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

மகாவீர் ஜெயந்தி

அரச குடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்கு போதித்தவர் மகாவீர். தமிழகத்தில் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதேபோல் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வாழும் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் சார்பில் மகாவீர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஊட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள ஜெயின் கோவிலில் நேற்று காலையில் ஜெயின் சமூகத்தினர் திரண்டனர். அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பின்னர் அவர்கள் விழாவை கொண்டாடும் விதத்தில் ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலம்

பஸ் நிலையம் முதல் மெயின் பஜார், அப்பர் பஜார் சென்று ஊர்வலமாக மீண்டும் ஜெயின் கோவிலை வந்து அடைந்தது.

இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் அகிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக்கூடாது போன்ற மகாவீர் அறிவுறுத்திய சமத்துவ கொள்கையை தெரியப்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றோம்.

மேலும் உலக அமைதிக்காவும் ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். ஊர்வலத்தை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் 24 பேர் தீர்த்தங்கரர்களைப் போல் அலங்காரம் செய்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

குன்னூர்

குன்னூர் பகுதியிலுள்ள ஜெயின் சமூக மக்கள் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு மகாவீர் படத்தை ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலம் குன்னூர் லாலி அரசுஆஸ்பத்திரி கார்னரிலிருந்து தொடங்கி மவுண்ட்ரோடு, குன்னூர் பஸ் நிலையம், லெவல் கிராஸிங், நீதி மன்ற வளாகம் ஆகியவற்றின் சாலை வழியே ஜெயின் கோவிலை சென்றடைந்தது. இதில் ஜெயின் மக்கள் பக்தி பஜனை பாடி, ஊர்வலமாக சென்றனர். மேலும் ஊர்வலத்தில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஜெயின் மக்களின் வழிபாடுகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்