சமையல்காரருக்கு சாகும் வரை சிறை
மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த சமையல்காரருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி
மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த சமையல்காரருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மாற்றுத்திறனாளி சிறுமி
நீலகிரி மாவட்டம் மசினகுடியை அடுத்த மாயாறு பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 52). வனத்துறை அலுவலகத்தில் தற்காலிக சமையல்காரராக பணியாற்றி வந்தார்.
இவரது மகள், மசினகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அவரை பார்க்க செல்லும்போது, அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருடன் மணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டுக்கும் சென்று வருவது வழக்கமாக இருந்தது.
பாலியல் பலாத்காரம்
அந்த விவசாயியின் 13 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவளது கை, கால்கள் செயல் இழந்தது. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாள்.
இதற்கிடையில் 16-5-2022 அன்று அந்த விவசாயி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மணி, தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடினார்.
இதை அறிந்த விவசாயி, கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுசீலா, ஏட்டு சுகந்தி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சாகும் வரை சிறை
இந்தநிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மணிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு கூறினார். மேலும் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் 2 மாத காலத்திற்குள் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். பின்னர் கோவை மத்திய சிறையில் மணி அடைக்கப்பட்டார்.