அதிமுக கள ஆய்வுக்குழு: நாளை ஆலோசனை
அதிமுகவில் கள ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கட்சிப் பணிகளை விரைவு படுத்துவதற்காக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், .தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம் எம்.பி., செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகிய 10 பேர் கொண்ட கள ஆய்வு குழு ஒன்றை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தார்.
மேற்கண்ட குழுவினர், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை வருகிற டிசம்பர் 7-ந்தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு 'கள ஆய்வுக்குழு' ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த குழுநேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளது.