பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை; அம்பை கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
அம்பை:
பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நகை பறிப்பு
அம்பை கீழ புது தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (வயது 75). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் கடந்த 2014-ம் ஆண்டு வீட்டின் அருகில் குப்பையை கொட்ட சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், ஆவுடையம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த மணி மகன் இசைச்செல்வன் என்ற கிங் (27), அவருடைய நண்பர்களான அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (33), கீழ்ப்பாட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துகுமார் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
6 மாதம் சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச்செல்வன் குற்றம் சாட்டப்பட்ட இசைச்செல்வனுக்கு சிறையில் இருந்த 125 நாட்கள் தண்டனை காலமாக கழித்து ரூ.3 ஆயிரம் அபராதமும், அதனை செலுத்த தவறினால் ஒரு மாத சிறை தண்டனையும், முத்துகுமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும், அதனை செலுத்த தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஸ்ரீகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவரது வழக்கு தனியாக நடைபெற்று வருகிறது.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று விக்கிரமசிங்கபுரம் நாயுடு ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மனைவி சுப்புலட்சுமியிடம் (56), கடந்த 2015-ம் ஆண்டு 3 பவுன் நகையை பறித்து சென்றதாக, அம்பை அருகே முடப்பாலம் தெற்கு காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துசெல்வன் (35), பிரம்மதேசம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் மருதுபாண்டி (27) ஆகிய 2 பேரை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முத்துசெல்வனுக்கு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கழித்து ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 மாத சிறை தண்டனையும், மருதுபாண்டிக்கு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கழித்து, ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.