கைதிகளை, ஜெயில் அதிகாரிகள் நல்வழிப்படுத்த வேண்டும்
கைதிகளை, ஜெயில் அதிகாரிகள் நல்வழிப்படுத்த வேண்டும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.
வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகம் (ஆப்கா) உள்ளது. இங்கு சிறை அதிகாரிகளுக்கான 5 நாள் புத்தாக்க பயிற்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.துணை இயக்குனர் பாஸ்கர், வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மதன்ராஜ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து, கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது:-
குற்றங்கள் செய்து சிறைக்கு வரும் நபர்களை சீர்திருத்த கல்வி கற்பித்து தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே செல்பவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்கிறது.
கைதிகளை சீர்திருத்துவது தான் காவலரின் முக்கிய பணி. சிறப்பாக பயிற்சியை கற்றுக் கொண்டு கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். ஜெயிலில் இயங்கும் தொழிற்சாலைகள் கைதிகளின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். அங்கு அவர்கள் கற்றுக்கொள்ளும் வேலை மறுவாழ்வுக்கு வழிவகையாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தென்மாநிலங்களை சேர்ந்த 31 அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை பியூலாஇமானுவேல் நன்றி கூறினார்.