கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் நேற்று சிறை அதாலத் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.
நீதித்துறை நடுவர் எண்.2 நீதிபதி பிரபாகரன் வழக்குகளை விசாரித்தார். மொத்தம் 14 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் பரமக்குடி லோகேஸ்குமார், வாலாந்தரவை பிரகாஷ், தொண்டி தொன்ராசு, மானாமதுரை மகாலிங்கம் ஆகிய 4 பேரும் திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களின் வழக்கு விவரங்களின் அடிப்படையில் விசாரணை செய்த நீதிபதி பிரபாகரன், மேற்கண்ட 4 பேரும் சிறையில் இருந்த காலத்தினை தண்டனை காலமாக கருதி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். நிகழ்வில், மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தவமணி, சட்ட வழக்கறிஞர்கள் கேசவன், விஜய்ஆனந்த், பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப்-கோர்ட்டு நீதிபதி கதிவரன் செய்திருந்தார்.