பயணப்படி வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்றவட்டார வளர்ச்சி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை

Update: 2023-02-27 19:00 GMT

வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த போது பயணப்படி வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்றவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

லஞ்சம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு அரசு பள்ளிகள், குழந்தைகள் நல மையம், சிறுவர் பள்ளிகளுக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முட்டைகளை எடுத்துச் சென்று வினியோகம் செய்து வந்தார்.

இதற்குரிய பயணப்படி வழங்ககோரி உரிய ரசீதுகளுடன் அப்போது பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நாகராஜனிடம் விண்ணப்பித்தார். இந்த பயணப்படியை வழங்க மாதம் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று நாகராஜன் கேட்டுள்ளார். அதன் பின்னர் லஞ்ச தொகையை குறைத்து மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2 ஆண்டு சிறை தண்டனை

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத காளியப்பன் இதுபற்றி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து நாகராஜனிடம் ரூ.1,500 லஞ்சமாக காளியப்பன் வழங்கினார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவில் நாகராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்