லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி பலாத்காரம்:கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி பலாத்காரம்:கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு

Update: 2023-07-19 19:00 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து கைதான வாலிபர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி பலாத்காரம்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த வாலிபர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அணைப்பாளையம் புறவழிச் சாலை வழியாக சிங்களாந்தபுரம் அருகே உள்ள கரட்டு பகுதிக்கு சென்றார்.

இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்ததுடன், இதுகுறித்து வாலிபரிடம் கேட்டபோது மாணவியை மிரட்டியதுடன், கருவேல காட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த வாலிபர் மாணவியை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். பாதிக்கப்பட்ட மாணவி அழுதவாறு அந்த வழியாக வந்தவர்களிடம் உதவி கேட்டு பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தனிப்படை அமைப்பு

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி நாமகிரிப்பேட்டை அருகே தொப்பபட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மணிகண்டன், மாணவியை பலாத்காரம் செய்ததை ஒப்புகொண்டான். இதையடுத்து அவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மீது இளம்பெண் கடத்தல், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தல் என 366, 376, 394, மற்றும் 397 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து போலீசார் மணிகண்டனை ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட்டு ஹரிகரன் உத்தரவின்படி மணிகண்டன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இதற்கிடையே கைதான மணிகண்டன் டிப்ளமோ படித்துவிட்டு நாமகிரிப்பேட்டை அருகே ஒன்பதாம் பாலிகாடு பகுதியில் உள்ள கரும்பு அரவை ஆலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

மூதாட்டி கொலை வழக்கு

மேலும் இவன் திருச்செங்கோடு அருகே ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாவாயி (70) கொலை வழக்கில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்