போதைப்பொருள் கடத்தல் மூலம் ரூ. 40 கோடி ஈட்டிய ஜாபர் சாதிக் - அமலாக்கத்துறை தகவல்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் 40 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் 40 கோடி ரூபாய் ஈட்டியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை கடந்த 9ம் தேதி நடத்திய சோதனையில் 40 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈட்டிய பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்பட தயாரிப்பில் 6 கோடி ரூபாய் நேரடியாகவும், 12 கோடி ரூபாய் பிறர் மூலம் மறைமுகமாகவும் முதலீடு செய்துள்ளார். பணத்தை சினிமா துறையிலும், ரியல் எஸ்டேட் துறையிலும் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.