கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவிப்பு - மதுரையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

Update: 2023-01-08 21:21 GMT


கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

உயர்மட்ட குழு கூட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர் தொகை, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவைகளை வழங்கிட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர் மட்டக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, பொன்.செல்வராஜ், மயில் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்ணாவிரத போராட்டம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறும். மார்ச் 5-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம். தொடர்ந்து, மார்ச் 24-ந்தேதி, வட்டார, மாவட்ட தலைநகரங்களில் 20 ஆயிரம் கிலோமீட்டர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். இந்த 3 கட்ட போராட்டத்திற்கு பின்னும் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். அதன்பின்பு எங்களது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

அதிகார வர்க்கத்துக்கும், ஆட்சியாளருக்கும் இடையே இடைவெளி உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களது உரிமையை பறித்து வருகிறார்கள். தற்போதையை தி.மு.க. ஆட்சி இரட்டை தன்மை ஆட்சியாக இருக்கிறது, தமிழக நிதித்துறை கார்ப்பரேட் சிந்தனையுடன் செயல்படுகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்