ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
உண்ணாவிரத போராட்டம்
வேலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், ஜெயகாந்தன், சகேயு சத்தியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் இளங்கோவன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், அ.சேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சேகர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
15 அம்ச கோரிக்கைகள்...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4 சதவீத அகவிலைப்படியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும். சரண்டர் விடுப்பு தடை ஆணையை ரத்து செய்து சரண்டர் விடுப்பு சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவு வழங்க வேண்டும். தனியார் முகமை மூலம் அனைத்து அரசுத்துறைகளிலும் ஊழியர்களை நியமனம் செய்வதை ரத்து செய்து விட்டு, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தொகுப்பு ஊதியம், சிறப்புஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.