கடைகளில் விற்பனைக்காக குவிந்து வரும் பலாப்பழங்கள்

வடகாடு பகுதியில் கடைககளில் விற்பனைக்காக விவசாயிகள் பலாப்பழங்களை குவித்து வைத்து வருகின்றனர். விற்பனை விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-05-03 18:15 GMT

கஜா புயல் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மூலமாக, நல்ல முறையில் விளைச்சல் தந்து கொண்டிருந்த பலாப்பழ உற்பத்தி 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சிக்கி சின்னா பின்னமாகி போனது. இதில் பேரிழப்பை சந்தித்து வந்த இப்பகுதி மக்கள் பின்னர் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, மீண்டும் நஷ்டத்தை சந்தித்து, பெரும் பொருளாதார சிரமங்களை சந்தித்து வந்துள்ளனர்.

உற்பத்தி அதிகரிப்பு

இப்பகுதிகளில் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் பலா உற்பத்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆண்டிற்கு ஆண்டு பலா உற்பத்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பலா விளைச்சல் அமோகமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடைகளில் விவசாயிகள் பலாப்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

தித்திக்கும் சுவை

இங்கு விளையும் பலாப்பழங்கள் நாவிற்கு தித்திக்கும் சுவையை தரக்கூடியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து எடை மற்றும் ஏல முறைகளில், வடகாடு, மாங்காடு, அனவயல், புளிச்சங்காடு, கைகாட்டி, கீரமங்கலம், குளமங்கலம், கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் இருந்து வாங்கி சரக்கு வேன் மூலமாக விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் முதல் தரமான பலாப்பழங்கள் மும்பை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டன் கணக்கில்...

இப்பகுதிகளில் தை மாதம் துவங்கி ஆடி, ஆவணி மாதம் வரை சுமார் 7 மாத காலத்திற்கு பலாப்பழ உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், இதில் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பலாப்பழ உற்பத்தி அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் சுமார் நூறு டன் முதல் 500 டன் வரை ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முன்பு கிலோ பலாப்பழம் ரூ.22-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.10, 15-க்கு விற்பனையாகிறது.

மதிப்பு கூட்டும் முறை

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இங்கு விளையும் பலாப்பழங்களுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் எந்தவொரு மதிப்பு கூட்டும் நடைமுறைகளும் அறிவிக்கப்படாததால் அதிகம் உற்பத்தி ஆகும் சமயங்களில் பலாப்பழ விவசாயிகள் உரிய விற்பனை விலைகளில் விற்பனை செய்ய முடியாதது பெரும் பொருளாதார சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்