செல்போனில் பேசியபடி நடந்து சென்றதால் பரிதாபம் - ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலி

ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே இளம்பெண் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றதால் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2022-05-27 13:24 IST

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம், வெங்கடேஸ்வரா அவென்யூவைச் சேர்ந்தவர் ஏமி கார்மைக்கேல் (வயது 26). இவர், 26 வருடங்களுக்கு முன்பு தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்டவர். ஆதரவற்றவரான இவர், ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார்.

ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் ஆசிரமத்தில் இருந்து வெளியேறி நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி, வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் அருகே செல்போன் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற ரெயில் ஏமி கார்மைக்கேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர். தண்டவாளம் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், பலியான ஏமி கார்மைக்கேல் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்