'அண்ணாமலை நாகரீகமாக பேசுவதற்கு மேல்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும்' - கடம்பூர் ராஜு
அண்ணாமலை நாகரீகமாக பேசுவதற்கு மேல்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றிருப்பது குறித்து அவர் பேசியதாவது;-
"அண்ணாமலை ஆராய்ச்சி படிப்பு படிப்பதை விட, அரசியலில் நாகரீகமாக எப்படி பேச வேண்டும் என்பது குறித்து படிக்க வேண்டும். அண்ணாமலை அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கூட நிறைவு பெறவில்லை. அவர் எடப்பாடி பழனிசாமியின் ஆரம்ப கால அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். குற்றச்சாட்டு பதிவாகி இருக்கலாம், அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அந்த வழக்கின் முடிவில் நிரபராதி என தீர்ப்பு வந்த பிறகு, அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்பது அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.
அண்ணாமலை நாகரீகமாக பேசுவதற்கு மேல்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும். அதற்கு பதில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதால் பயன் இல்லை."
இவ்வாறு கடம்பூர் ராஜு தெரிவித்தார்.