"தென்காசி வாலிபர்தான் என்னை கடத்தி திருமணம் செய்து சிறை வைத்தார்" குஜராத் பெண் வெளியிட்ட ஆவணங்களால் பரபரப்பு
தென்காசி வாலிபர் வினித் தன்னை கடத்திச்சென்று திருமணம் செய்து வீட்டில் சிறை வைத்ததாகவும், எனக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி பதிவுச்சான்று உள்ளதாகவும் இளம்பெண் குருத்திகா தரப்பு வெளியிட்ட ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா, கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மாரியப்பன் வினித் (வயது 22). இவர், குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் படேல் என்பவரின் மகள் குருத்திகாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்தார். இதுசம்பந்தமான புகாரில், சில நாட்களுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பியபோது நவீன்படேல் தரப்பினர் வினித்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை கடத்திச்சென்றது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது.
தனது மனைவியை ஆஜர்படுத்தும்படி வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் குருத்திகாவை போலீசார் மீட்டு, ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். கிருத்திகாவிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஆவணங்கள் வெளியீடு
இந்தநிலையில், குஜராத்தில் மைத்ரிக் ஹரேஷ்பாய் என்பவருடன் திருமணம் நடந்துவிட்டதாகவும், ஒரு வாரத்துக்கு முன்பு அந்த திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் குருத்திகா தரப்பில் ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுசம்பந்தமாக ஒரு திருமண சான்றையும் அந்த ஆவணங்களுடன் இணைத்து உள்ளார். அந்த ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதுமட்டுமல்லாமல் வினித் தரப்பினர்தான் தன்னை கட்டாயப்படுத்தி கடத்திச்சென்று திருமணம் செய்து அவரது வீட்டில் சிறை வைத்ததாக குருத்திகா அதில் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த ஆவணங்கள் அனைத்தும் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் தனக்கு குருத்திகாவுடன் நடந்த திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள், ஆவணங்களை வினித் தரப்பில் ஏற்கனவே போலீசில் தாக்கல் செய்யப்பட்டு, கோர்ட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.
போலீசார் கருத்து
இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறியதாவது:-
குஜராத் வாலிபருடன் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக குருத்திகா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் தென்காசி வாலிபர் வினித், உறவினர்கள் முன்னிலையில் குருத்திகாவை திருமணம் செய்ததாக புகைப்பட ஆதாரங்களுடன் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
ஓரிரு நாளில் குருத்திகாவிடம் விசாரணை செய்தபின்புதான் உண்மை என்னவென்று தெரியவரும். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வைரல் மீம்ஸ்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு காதல் சம்பவங்களில் பாதிக்கப்படுவது ஆண்கள்தான் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, வைரலாகி வருகின்றன. குருத்திகா குறித்தும் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.