வியாபாரி வீட்டில் 8 பவுன் நகை, பணம் திருட்டு போனதாக நாடகமாடியது அம்பலம்

ஜோலார்பேட்டை அருகே வியாபாரி வீட்டில் 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனதாக புகார் செய்யப்பட்டது. விசாரணையில் நகையை மறைத்து வைத்து விட்டு நாடகமாடியது அம்பலமானது.

Update: 2023-07-12 18:52 GMT

திருட்டு போனதாக புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஹாயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் பியாரோ (வயது 56). இவர் திருப்பத்தூர் பகுதியில் மிளகாய் பொடி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சமிம். இவர்களுக்கு இர்பான் என்ற மகனும், சல்லூர், நிகார், அம்ரின் என 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மகள் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதற்காக 8 பவுன் நகையை பீரோவில் வைத்திருந்தனர்.

மேலும் அம்ரினுக்கு ஆதார் கார்டு எடுக்க நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வீட்டை பூட்டி, வீட்டின் வெளியே உள்ள சிறிய பக்கெட்டில் சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை நிச்சயதார்த்த செலவிற்காக பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுக்க சென்றபோது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு பியாரோ தகவல் கொடுத்தார்.

நாடகமாடியது அம்பலம்

அதன்பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்படாமல், சாவியை எடுத்து பீரோவை திறந்து நகை, பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பீரோவின் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்ததில் பீரோவில் உள்ள ரகசிய அறையில், காணமால் போனதாக கூறப்பட்ட நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் நகை, பணத்தை மறைத்து வைத்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலிசார் அவர்களை எச்சரித்து, நகை, பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்