தந்தையின் பிணத்துடன் 7 நாட்கள் வீட்டுக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் - ஈரோட்டில் பரபரப்பு
ஐ.டி. ஊழியருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் தந்தையுடன் வீட்டில் இருந்தார்.;
ஈரோடு,
ஈரோடு அருகே சித்தோடு ஆர்.என்.புதூர் காலிங்கராயன்நகரில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது 72). இவருடைய மனைவி கிருஷ்ணாபாய் (68). இவருடைய மகன் மோத்தி (44). மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தகுமார் காலிங்கராயன்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கிருஷ்ணாபாய் ஜவுளி நகரில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
மோத்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின்னர் அவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் தந்தையுடன் தங்கியிருந்தார். அவ்வப்போது தாயையும் சென்று கவனித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இரவு நந்தகுமார் குடியிருந்த வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நந்தகுமார் உயிரிழந்த நிலையில் உடல் போர்வையால் சுற்றப்பட்டு இருந்தது.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோத்தியை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். அப்போது பிணம் அழுகிய நிலையில் இருந்தது தெரிந்தது.
பின்னர் நந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வீட்டுக்கு வந்த மோத்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் தந்தை உயிரிழந்துவிட்டது தனக்கு தெரியாது என்றும், அவர் தூங்கிக்கொண்டு இருந்தார் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் நந்தகுமாரின் பிரேதபரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில் அவர் உயிரிழந்து 7 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தந்தை இறந்தது தெரியாமலேயே மோத்தி 7 நாட்கள் பிணத்துடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து நந்தகுமார் எப்படி உயரிழந்தார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோத்தியை அவருடைய தாய் கிருஷ்ணாபாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தந்தையின் பிணத்துடன் 7 நாட்கள் ஐ.டி.நிறுவன ஊழியர் இருந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.