காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 168 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 168 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 168 மூட்டை ரேஷ்ன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகன் உள்ளிட்ட 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் சோதனை
சாத்தான்குளம் அருகே தோப்பூர் காட்டுபகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளியிடங்களுக்கு கடத்த இருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் கந்தசுப்பிரமணியன், பூலை நாகராஜன் ஆகியோர் சாத்தான்குளம் அருகே தோப்பூர் மேல்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்
அப்போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 93 ரேஷ்ன் அரிசி மூட்டைகளையும், 40 கிலோ எடை கொண்ட 75 ரேஷ்ன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகன்
இவற்றை கடத்தி வந்து இப்பகுதியில் பதுக்கியவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜயராமபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முககனிசக்திவேல் மகன் முத்துச்செல்வம், கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா மகன் ஆறுமுகநயினார் என்ற நயினார், தாதன்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் சாத்தான்குளம் தாலுகாவில் ஒரு ரேஷன் கடையிலும், சுற்று வட்டார கிராமங்களிலும் ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முத்துசெல்வன், ஆறுமுகநயினார், ஆறுமுகம் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் ஆகிய 4 பேரை தேடிவருகின்றனர்.