சிறுமியின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது
சேலம் அருகே சிறுமி மர்மசாவு வழக்கு விசாரணையில், அந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.;
அயோத்தியாப்பட்டணம்:-
சேலம் அருகே சிறுமி மர்மசாவு வழக்கு விசாரணையில், அந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சிறுமிக்கு திருமண ஏற்பாடு
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சியாமளா (36). இவர்களுக்கு ஸ்ரீதேவி (17), கோமதி (15) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
இவர்களில் மூத்த மகள் ஸ்ரீதேவி 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளாள். சமீபத்தில் இவளை அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சம்பத் (22), திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று விட்டார். பின்னர் ஸ்ரீதேவியை போலீசார் மீட்டதுடன், சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய தொடங்கினர். ஆனால் அந்த சிறுமி தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறி மறுத்துள்ளார்.
மர்ம சாவு
இதனால் மனம் உடைந்த அந்த சிறுமியின் தாயார் சியாமளா நேற்று முன்தினம் நள்ளிரவில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதையடுத்து அவரை, கணவர் அறிவழகனும், 2-வது மகள் கோமதியும் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதேவி நேற்று முன்தினம் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து அன்று காலையில் வீட்டுக்கு திரும்பிய தந்ைத அறிவழகன் இது குறித்து காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மர்ம சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விஷம் கலந்திருப்பது உறுதி
இந்த நிலையில் நேற்று அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே பிரேத பரிசோதனை செய்த டாக்டர், அந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.
எனவே தனது தாயார் தன்னால் தான் தற்கொலைக்கு முயன்றார் என்ற பயத்தில் மீதமிருந்த அரளிவிதையை சிறுமி ஸ்ரீதேவி அரைத்து குடித்து விட்டாரா? அல்லது வேறு யாரேனும் அவருக்கு அரளி விதையை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் முழுவிவரம் கிடைக்க பெற்ற பிறகு தான் சிறுமியின் சாவில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.