ஜனாதிபதியுடன் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது
ஜனாதிபதியுடன் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாகன்கள் பேட்டி அளித்தனர்.
கூடலூர்
ஜனாதிபதியுடன் பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாகன்கள் பேட்டி அளித்தனர்.
மகிழ்ச்சி அளிக்கிறது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதுமலை பாகன்கள் தேவராஜ், கிரி மாறன், சுரேஷ், விக்ரம் ஆகியோரிடம் கலந்துரையாடினார். இதுகுறித்து பாகன் தேவராஜ் கூறியதாவது:-
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை பராமரிப்பது குறித்து ஜனாதிபதி கேட்டார். அப்போது யானைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கிறோம் என்பதை விளக்கி கூறினேன். அதை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, பாரம்பரியமாக நல்ல முறையில் வளர்ப்பு யானைகளை வளர்த்து வருவதாக பாராட்டினார். மேலும் இன்னும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். ஜனாதிபதி நேரில் வந்து பாராட்டி பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜனாதிபதி பாராட்டினார்
பாகன் கிரிமாறன்:- என்னிடம், நீங்கள் இதுவரை எத்தனை யானைகளை பாதுகாப்பாக பிடித்து உள்ளீர்கள்? என ஜனாதிபதி கேட்டார். அதற்கு கேரளாவில் 15 காட்டு யானைகள், கர்நாடகாவில் 2 யானைகள், ஆந்திராவில் ஒரு யானை உள்பட 25-க்கும் மேற்பட்ட யானைகளை பாதுகாப்பாக பிடித்து உள்ளேன் என தெரிவித்தேன். இதை கேட்டு ஜனாதிபதி என்னை பாராட்டினார். ஜனாதிபதி பாகன்களுடன் பேசி பாராட்டியது சந்தோஷமாக உள்ளது.
பெருமையாக உள்ளது
பாகன் சுரேஷ்:- எங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து பரம்பரை, பரம்பரையாக யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அம்மாவிடம் (ஜனாதிபதி) தெரிவித்தேன். இதுதவிர ஊருக்குள் புகுந்து மனிதர்களை கொன்ற டி-23 புலியை பிடிக்க முக்கிய பங்காற்றினேன். மேலும் தாய்லாந்து நாட்டுக்கு வனத்துறை மூலம் அழைத்து செல்லப்பட்டேன். இதனால் அரசுக்கு நன்றி என கூறினேன். வளர்ப்பு யானைகள் முகாமுக்கு ஜனாதிபதி வந்தது, ஆதிவாசி மக்களுக்கு பெருமையாக உள்ளது.
கவுரவிப்பு
பாகன் விக்ரம்:- ஜனாதிபதி எங்களுடன் பேசியது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவருக்கு மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்தேன். இதை கேட்ட ஜனாதிபதி பதிலுக்கு என்னை பாராட்டினார். இதுவரை எங்களுக்கு கிடைக்காத கவுரவம் ஜனாதிபதி மூலம் கிடைத்து உள்ளது.
ஆனைமலை பாகன் அரவிந்தன்:-
ஜனாதிபதி எங்களை பெருமை அடைய வைத்து உள்ளார். முதுமலைக்கு வந்தது போல் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கும் ஜனாதிபதி வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி எங்களை கவுரப்படுத்தியது சந்தோஷமாக உள்ளது.
சிறப்பாக பராமரிப்போம்
முதுமலை பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி:-
ரகு, பொம்மி குட்டி யானைகள் மூலம் எங்களுக்கு கிடைத்த பெருமையால் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எங்களிடம் ஜனாதிபதி நன்றாக பேசினார். எங்களை போல் முதுமலையிலும் மக்கள் உள்ளனர் என கூறினோம். இதனால் முதுமலைக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தோம். இதை ஏற்று முதுமலைக்கு ஜனாதிபதி வந்து உள்ளார். இதன்மூலம் நேரில் வந்து பாகன்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து அன்பளிப்பும் வழங்கினார்.
நாட்டின் ஜனாதிபதியிடம் பாராட்டு பெற்றது யாருக்கும் கிடைக்காத பெருமை. தற்போது முதுமலையில் அரசு வேலை வழங்கி உள்ளதால், குட்டி யானைகள் வந்தால் சிறப்பாக பராமரிப்போம். மேலும் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார். எங்கள் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தால் போதும் என கூறினோம். அதை அதிகாரிகள் செய்து தருவார்கள் என கூறினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.