விழுப்புரத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தினால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்

Update: 2023-06-01 18:45 GMT

விழுப்புரம்

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் கடந்து சுட்டெரித்தது.

அதேபோல் விழுப்புரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாகி 105 டிகிரியை எட்டி கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் கொடுமைக்கு அஞ்சி பெரும்பாலான மக்கள், வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

104 டிகிரி

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் மிகவும் உக்கிரமாக இருந்ததோடு சாலைகளில் அனல் காற்றும் வீசியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.கத்திரி வெயில் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் வெயில் சுட்டெரித்து வருவதால் புழுக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த சூழ் நிலையில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்த காணப்பட்டது. இயல்பை விட அதிகமாக சுட்டெரித்த வெயில் 104 டிகிரியாக பதிவானது.

பொதுமக்கள் அவதி

இதனால் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பாதசாரிகள் சிலர் கையில் குடை பிடித்துக்கொண்டும், தலையில் தொப்பி அணிந்தும், துணியால் தலையில் போர்த்திக்கொண்டும் சென்றதை காண முடிந்தது. புழுக்கம் தாங்க முடியாமல் சில வாகன ஓட்டிகள் சட்டையை கழற்றி விட்டு வாகனங்களை ஓட்டினர். அதிகவெப்பம் காரணமாக உடலில் வியர்வை நீர் வடிந்து தாகத்தை வருத்தியது. இளநீர், மோர், கரும்பு சாறு, பதனீர், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, கிருணிப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டும் மக்கள் தாகத்தை தணித்துக்கொண்டனர். மழை பெய்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை இருப்பதால் வருணபகவான் கருணை காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்