மகப்பேறு, சிசு மரணம் இல்லாத மாவட்டமாக திகழ வேண்டும்
மகப்பேறு, சிறு மரணம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
மகப்பேறு, சிறு மரணம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி திகழ வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறினார்.
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தாய்சேய் நலம் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மகப்பேறு மரணம் எதுவும் நிகழவில்லை. தமிழகத்தில் மகப்பேறு மரணம் மிக குறைவாக நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக கிருஷ்ணகிரி மாவட்டம் திகழ்கிறது. அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், சமுதாய சுகாதார மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் பொறுப்புடன் பணியாற்றி மகப்பேறு மற்றும் சிசு மரணம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் விளங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சந்தேகத்திற்குரிய பெண் குழந்தைகள் சிசு மரணம் ஏதேனும் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டால் முதல் தகவல் அறிக்கை காவல்துறை மூலமாக பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டில் குழந்தை திட்டம்
மேலும், முதல் பெண் குழந்தை பிறந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பெண் குழந்தைகள் பிறக்கும் போது அதனை விரும்பாத பெற்றோர்கள் அக்குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.
கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட குடும்ப நல டாக்டர் மலர்விழி மற்றும் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.