ஒட்டன்சத்திரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்; பா.ம.க. வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-01-16 19:12 GMT

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் ந.சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, நகர துணை செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அர்ச்சுனன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சின்னத்துரை தலைமையில் 25 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர். இவர்களுக்கு, மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பை ஊராட்சியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மண் எடுப்பதை வருவாய்த்துறையினர் தடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால், ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து, ஒட்டன்சத்திரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துகொள்ள பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் தங்கும் வசதி ஏற்படுத்தி, உணவு வழங்க இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கச்சிமாபட்டி சடையகுளத்தில் மீன்பிடிக்க முறையாக ஏலம் விட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்