வடகிழக்கு பருவமழையால் சேதம் ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் உயிர் சேதம், பொருட்கள் சேதம் ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார்.

Update: 2022-10-19 18:30 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் உயிர் சேதம், பொருட்கள் சேதம் ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாகவும், இடி, மின்னல் தாக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடமைகளுக்கும் சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், அவற்றினை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு தேவையான தற்காலிக தங்க வைப்பதற்கான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் வடகிழக்கு பருவமழைக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித்துறை அலுவலர்கள் அவர்களின் எல்லைகளில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைப்பு இருப்பின் அவற்றை அகற்றவும், மழைநீர் தடையின்றி செல்லவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறைகள்

தாழ்வாக செல்லும் மின் தடங்கள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை கண்டறிந்து அவைகளை அகற்றவும், சீர் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை காலங்களில் காற்றினால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது கண்டால் 1912 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கவும்.

மேலும் புகார்களை தெரிவிக்க ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரக்கோணம் 04177-236360, 9445000507, ஆற்காடு 04172-235568, 9445000505, வாலாஜா 04172-299808, 9445000506, சோளிங்கர் 04172-290800, 9944353601, நெமிலி 04177-247260, 9789641611, கலவை 8012729137 இந்த எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172-273166 / 273188 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர் சேதங்கள் இன்றி இருக்க அனைவரும் உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்