முற்றிலும் தடுக்க வேண்டும்: சிப்காட் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு- அமைச்சர் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் புகார்
சிப்காட் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதால் கழிவு நீர் வெளியேறுவதை முற்றிலும் தடுக்க கூறி அமைச்சர் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.;
சிப்காட் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதால் கழிவு நீர் வெளியேறுவதை முற்றிலும் தடுக்க கூறி அமைச்சர் சு.முத்துசாமியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அமைச்சரிடம் மனு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த ஈங்கூர், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மற்றும் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலை வளாகம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஓடை வழியாக பாய்ந்து செல்கிறது.
குளங்கள்
ஈங்கூர் கிராமம் குட்டப்பாளையம், பனியம்பள்ளி கிராமம் குமாரபாளையம் ஆகிய பகுதிகள் வழியாக ஓடையில் பாய்ந்து ஓடையக்காட்டூர் குளத்துக்கு செல்கிறது. இந்த குளம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் முழுவதும் கழிவுநீரால் நிறைந்து வழிந்து வாய்ப்பாடி கிராமம் எளையாம்பாளையம் வழியாக மருகம்பாளையம், தோட்டத்துப்புதூர் கிராமங்கள் வழியாக கண்ணாய்க்காடு குளத்துக்கு செல்கிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளமும் நிரம்பி வாய்ப்பாடி கிராமம் சுல்லிமேடு வழியாக கூத்தம்பாளையம், கொளத்துப்பாளையம் வழியாக புஞ்சை பாலதொழுவு குளத்துக்கு செல்கிறது. இந்த குளம் 477 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
இந்த குளத்தின் மூலம் விவசாயம் செய்யப்படும் நிலங்களுக்கு சிப்காட் கழிவு நீர்தான் கிடைக்கிறது. இதுபோல் சிப்காட்டில் இருந்து கழிவு நீர் பாய்ந்து வரும் ஓடையில் இருந்து வரும் கசிவு நீரும் அதிக உப்புத்தன்மையுடன் உள்ளதால், வழி நெடுகிலும் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டது. எனவே குடிநீரும் கெட்டுப்போய் உள்ளது.
விவசாயம் பாதிப்பு
இந்த காரணங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீரும் மாசு அடைந்து இருப்பதால் சிப்காட்டை நம்பி இருக்கும் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே சிப்காட்டில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். சிப்காட் வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் நிரந்தர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, தண்ணீரை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி, இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.