கழிவுநீரில் பாத்திரத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் அவலம்
வடக்குவெள்ளூர் கிராமத்தில் கழிவுநீரில் பாத்திரத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.;
மந்தாரக்குப்பம்:
கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது வடக்குவெள்ளூர். இந்த ஊராட்சி 2 பகுதியாக உள்ளது. இதில் ஒரு பகுதி, என்.எல்.சி.யால் மாற்றி அமைக்கப்பட்டது. ஆகையால் அந்த பகுதி, என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அந்த பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை என்.எல்.சி. நிர்வாகம் செய்து வருகிறது.
ஆனால் மற்றொரு பகுதி மட்டுமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்யவில்லை. குடிநீர் குழாயும் முறையாக பதிக்கவில்லை. அதாவது மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஓடும் சாக்கடை நீரில் பாத்திரத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் வகையில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கிராம மக்களும் குடிநீர் பிடித்து வருகிறார்கள். சில தெருக்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. அந்த தண்ணீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளது. எனவே குழாயை முறையாக அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.