ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்

ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2023-02-08 07:40 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காலாவதியாகி வரும் 28-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது

எட்டாவது ஆணையம் காலாவதியாகி 9 மாதங்கள் கழித்து தான் கடந்த நவம்பர் 27-ஆம் நாள் ஒன்பதாவது ஆணையத்தின் தலைவராக ஹன்ஸ்ராஜ் ஆஹிர் நியமிக்கப்பட்டார். அதன்பின் 3 மாதங்கள் ஆன பிறகும் ஆணையத்தின் துணைத்தலைவரும், உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை.

ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவது ஏமாற்றமளிக்கிறது.

கிரீமிலேயர் வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்