கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல்சூளை அதிபரை குத்திக்கொன்றது அம்பலம்
ஆரல்வாய்மொழியில் கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல்சூளை அதிபரை குத்திக் கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் கள்ளக்காதல் விவகாரத்தில் செங்கல்சூளை அதிபரை குத்திக் கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
செங்கல்சூளை அதிபர்
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). செங்கல்சூளை அதிபரான இவர் அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு இவர் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்ற அன்பழகன் (29) தனது கூட்டாளிகளுடன் சென்று அவரை வழிமறித்தார்.
குத்திக் கொலை
இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏசுதாசன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. ஏசுதாசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அவரை மீட்டு நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இரவில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
கும்பலுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணியை பலப்படுத்த போலீசாரை உஷார்படுத்தினார். இதுதொடர்பாக கும்பல் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரம்
இதற்கிடையே ரவுடி தலைமையிலான கும்பல் ஏசுதாசனை கொன்றது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
அதாவது செங்கல்சூளை அதிபர் ஏசுதாசனுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த பெண் ரவுடியான அன்புவின் நெருங்கிய உறவினரின் மனைவி. அவரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று ஏசுதாசன் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஏசுதாசனுக்கும், அன்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏசுதாசன் அவருடைய மகன் சுதனுடன் (25) சேர்ந்து அன்புவை பீர்பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது.
தீர்த்துக்கட்டினர்
இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே ஏசுதாசன் மீது அன்பு கோபத்தின் இருந்தார். இந்தநிலையில் தன்னை பொது இடத்தில் வைத்து அவர் தாக்கியதால் அன்புக்கு ஏசுதாசன் மீதான ஆத்திரம் கொலைவெறியின் உச்சிக்கே சென்றது.
இதனால் பழிக்கு பழி வாங்க அவரை கொல்ல வேண்டும் என திட்டமிட்டார். அதன்படி அன்பு தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று ஏசுதாசனை கத்தியால் குத்தி தீர்த்துக்கட்டியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமானது.
ஒருவர் சிக்கினார்
இதில் அன்புடன் சேர்ந்து ஏசுதாசனை தீர்த்துக் கட்டியது ஆரல் கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷன்காம்பவுண்டை சேர்ந்த தங்கஜோஸ் என்பது தெரியவந்தது.
அதே சமயத்தில் இந்த கொலையில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையே கொலையில் தொடர்புடைய ஒருவர் தனிப்படையினரிடம் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் ஏசுதாசன் கொலைக்கான முழு விவரம் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.