சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர்சேகர்பாபுவை பதவி விலகச்சொல்வது நியாயமில்லை; சீமான் பேட்டி

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகச்சொல்வது நியாயமில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Update: 2023-09-11 22:00 GMT

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகச்சொல்வது நியாயமில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சனாதனம்

ஈரோடு கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் ஆஜரானார். அதன்பின்னர் அவர் வெளிேய வந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நான் வரலாறை பேசினேன். அதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வின் ஆ.ராசா, அருந்ததியர் குறித்து அவதூறாக பேசியதற்கு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நான் பேசியது வரலாற்று உண்மை.

சனாதனம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதி இந்துக்கள். அவர்கள் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள். தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதாக இருந்தால், அவர்களோடு ஏன் கூட்டணி சேர வேண்டும்?. ஜி- 20 மாநாடு விருந்தில் பங்கேற்று, பிரதமர் மோடி அருகில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்றது ஏன்? இந்தியா கூட்டணி என்பதே வேடிக்கையான, குழப்பமான கூட்டணி.

இமானுவேல் சேகரன்

அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியில் பேசினால், பலர் உள்ளே சென்று விடுவார்கள். சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகச்சொல்வது நியாயமில்லை. ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் தான் தவறு செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்துள்ளது தேர்தல் அரசியலுக்கானது. இது தாமதமான அறிவிப்பு. அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. என் மீது 128 வழக்குகள் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் தி.மு.க.வால் போடப்பட்டது. விரைவில் அது 200 வழக்குகளாக உயரும்.

நீர் பங்கீடு

நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து, வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நாளை (அதாவது இன்று) ஆஜராகி விளக்கம் அளிப்பேன். காவிரியில் உரிய நீர் பங்கீடு இல்லாதவரை, தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கீடு இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும்.

சனாதனம் குறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. தி.மு.க. ஆட்சியில் நடந்த 1,000 கும்பாபிஷேகமும் சமஸ்கிருதத்தில் தான் நடத்தப்பட்டது. இவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள்?

இவ்வாறு சீமான் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்