"என் சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதினால் போதும்"- சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-29 09:51 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

கேள்விக்கேட்பதும், வெட்டுத்தீர்மானங்களை தருவதும் உறுப்பினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதற்காக உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நீர்வளத்துறைதான் எனக்கு வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கேட்டேன்.

என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் கட்சியில் இருந்தவன், இன்னும் இருக்கபோகிறவன், என்றைக்காவது ஒருநாள் மறையப்போகிறவன். நான் மறைந்துவிட்ட அன்று எனக்காக எழுப்பப்படும் சமாதியில் 'கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்' என்று எழுதினால் போதும் என கலங்கிய படி பேசினார். இடையே குறுக்கிட்ட சபாநாயகர் 'இன்னும் நூறாண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்' என்றார். அதற்கு 'நிச்சயமாக' என துரைமுருகன் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், அத்திகடவு அவிநாசி திட்டம், அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது. காவிரி குண்டாறு திட்டத்தை நாங்கள் விட்டு விடவில்லை.

நடந்தாய் வாழி காவிரி திட்டம் நல்ல திட்டம். அது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சொல்லி உத்தரவிடப்பட்டது. அத்துடன் உங்கள் ஆட்சி முடிந்துவிட்டது; ஆனால் எங்கள் ஆட்சி வந்ததும் நடந்தாய் வாழி காவிரியை நடுரோட்டில் விடவில்லை, செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் நீர் தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம், சிறப்பு மென்பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப்படும். இப்பணி ரூ.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், 2 இடங்களில் கடல் நீர் உட்பகுவதை தடுக்கும் பொருட்டு, கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கும் பணிகள் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் மேற்கோள்ளப்படும்.

கோயம்புத்தூர் உட்பட 8 மாவட்டங்களின் 15 இடங்களில் புதிய தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் ரூ.70.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்