தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறதுரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?பயணிகள் குமுறல்

தட்கலில் எடுப்பது சிரமம்; பிரீமியம் தட்கலில் எளிதாய் கிடைக்கிறது ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன? என பயணிகள் குமுறுகின்றனா்.

Update: 2022-12-22 18:45 GMT

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையதளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட்டு எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது. வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.

தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும். ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும். உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் சாதாரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும்.

இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை. சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

கூடுதல் பெட்டிகள் ஒதுக்கீடு

கடலூர் வன்னியர்பாளையம் மளிகைக்கடைக்காரர் அன்பரசன்:- அவசர கால ரெயில் பயணங்களுக்கு உதவ தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் கோட்டாக்களை வழங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி. இந்த இரண்டு கோட்டா டிக்கெட்களுக்கும் ஒரே வித்தியாசம் மட்டுமே உள்ளது. விலை மட்டுமே அந்த வித்தியாசம். தட்கல் டிக்கெட் விலை, இரண்டாம் வகுப்பு பயண டிக்கெட் விலையில், 10 சதவீதம் அதிகமாக இருக்கும். இந்த தட்கல் டிக்கெட்டுக்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு முதல் காலை 11 மணி வரை காத்துக்கிடக்கின்றனர். மேலும் சிலர், இரவு முதல் டிக்கெட் கவுண்ட்டர் அருகிலேயே தட்கல் டிக்கெட்டுக்காக படுத்து கிடப்பதையும் காண முடிகிறது. அவர்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்தும், இருமடங்கு கட்டணம் செலுத்தி பலர் பிரிமீயம் தட்கலில் விரைவாக டிக்கெட் எடுத்து விடுவதால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் தட்கல் டிக்கெட்டுக்கென்று கூடுதல் பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஏமாறும் பயணிகள்

பெ.பொன்னேரியை சேர்ந்த ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் சுரேஷ்குமார்:- அவசர பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானோர் தட்கல் டிக்கெட்டையே எதிர்பார்க்கின்றனர். இதற்காக ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் முன்பு மணிக்கணக்காக காத்துக் கிடக்கின்றனர். ஆனால் சிலர் கூடுதல் கட்டணம் செலுத்தி பிரீமியம் தட்கலில் டிக்கெட்டை முன்பதிவு செய்து விடுவதால், தட்கலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நொடிப்பொழுதில் டிக்கெட்டுகள் தீர்ந்து விடுவதால், தட்கலுக்காக காத்திருக்கும் பயணிகள், ரெயில் பயணத்தை தவிர்க்க நேரிடுகிறது. அதனால் தட்கல் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் பிரீமியம் தட்கல் முறையை ரத்து செய்ய வேண்டும்.

கொள்ளையடிக்கும் திட்டம்

விருத்தாசலம் வக்கீல் ரவிச்சந்திரன்:- அவசர காலத்திற்கு உதாரணமாக, மருத்துவ சேவை மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தட்கல் டிக்கெட் சேவை. இதில் நடுத்தர மக்கள் மருத்துவ சேவைக்காக திடீரென பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தட்கல் முன்பதிவு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு, அதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது நடுத்தர மக்களிடம் எப்படி கொள்ளையடிப்பது என்று தெரிந்து தட்கல் பயணத்தில் உள்ள பயண கோட்டா டிக்கெட்டை அதில் 50 சதவீதம் உயர்த்தி பிரீமியம் டிக்கெட் என்ற முறையில் விற்கிறது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட தட்கல் டிக்கெட்டை அவர்களது கோட்டாவில் இருந்து கொள்ளையடித்து, வசதி படைத்தவர்களுக்கு அந்த சலுகையை வழங்கும் திட்டம் தான் பிரீமியம் ரெயில் கட்டண சேவை திட்டம். இது முற்றிலும் ஏழை-எளிய மக்களிடம் இருந்து அவர்களது பணத்தை கொள்ளையடிப்பதற்கான திட்டமாகும்.

நேரத்தை மாற்ற வேண்டும்

சிதம்பரம் உதவி பேராசிரியர் பாலசந்தர்:- ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இணையதளம் மூலமாக தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை. காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்யும் போது, விண்ணப்பம் வெளியேறி, 'சர்வர் கிடைக்கவில்லை' என்ற செய்தியைக் காட்டுகிறது. காலை 11.05 மணி வரை இதே நிலைதான். அதன் பிறகு உள்நுழைந்தாலும் டிக்கெட் கிடைப்பதில்லை. ஆனால் அதிவேகம் கொண்ட பிரீமியம் தட்கல் முறையை பயன்படுத்துபவர்களுக்கு எளிதில் டிக்கெட் கிடைத்து விடுகிறது. இதன் காரணமாக சாதாரண பொதுமக்களால் சாதாரண வகை இணையதள சேவையால் டிக்கெட்டு பெற முடியாத நிலை ஏற்பட்டு ஏமாற்றம் அடைகின்றனர். ஒரே நேரத்தில் தட்கல், பிரீமியம் தட்கல் டிக்கெட் எடுக்கப்படுவதால் தான் இந்த பிரச்சினை. இதனால் பிரீமியம் தட்கலுக்கென்று நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்