பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-12-21 08:17 GMT

சென்னை,

பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டம் வேப்பூரில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஓடைக் கரையில் அரசு நிலத்தில் வளர்க்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதன் நோக்கம் மரங்களை திருடுவது அல்ல. அதை விட தீய நோக்கம் கொண்டது ஆகும். நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக ஒரு நில வணிக நிறுவனம் தான் அதிகாரிகளின் துணையுடன் பனை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளது.

மரங்கள் வெட்டப்பட்டால் அதையொட்டி ஓடும் ஓடையை மூடி நிலத்தை நெடுஞ்சாலையுடன் இணைத்து விடலாம்; ஓடையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டலாம் என்பது தான் நில வணிக நிறுவனத்தின் நோக்கம். அதை அனுமதிக்கக்கூடாது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர வேண்டும்.

நெடுஞ்சாலையோரம் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும். அவற்றை வளர்ப்பதற்கான பராமரிப்பு செலவுகளை சம்பந்தப்பட்ட நில வணிக நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்