"பட்டமளிப்பு விழாவுக்கு ஜனாதிபதி வந்திருப்பது பெருமைக்குரியது" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-08-06 06:23 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தது சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாள். பட்டமளிப்பு விழாவுக்கு ஜனாதிபதி வந்திருப்பது பெருமைக்குரியது. ஏராளமான ஜனாதிபதிகள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம். பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலை.யில் தான் படித்தார், நானும் இந்த பல்கலை.யில் தான் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற உங்களின் சீனியர் என்ற அடிப்படையில் தான் நானும் இங்கு வந்துள்ளேன்.

இன்று பட்டம் பெறும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் இன்று பட்டம் பெறுவதை பார்த்து உங்கள் பெற்றோர் அடையும் மகிழ்ச்சியை போல், ஒரு முதல்-அமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் குடும்ப உறுப்பினராகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாணவர்கள் தகுதியான வேலை கிடைத்தப் பிறகும் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். மாணவர்கள் ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும். யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வி அறிவு தான்.

பள்ளிக் கல்வியை காமராஜர் வளர்த்தார், கல்லூரிக் கல்வியை கருணாநிதி வளர்த்தார், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம்.

இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. நாட்டில் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன. நாட்டில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் 9 கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளன என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்