ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் இருந்தால் பிற வகுப்பினர் சலுகைகளை இழப்பதாக வழக்கு

உயர் சாதியினருக்கு ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும். ஆனால், பிற வகுப்பினருக்கு ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே சலுகைகளை இழக்கும் நிலை உள்ளதாக தொடர்ந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-11-21 18:45 GMT

உயர் சாதியினருக்கு ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியும். ஆனால், பிற வகுப்பினருக்கு ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலே சலுகைகளை இழக்கும் நிலை உள்ளதாக தொடர்ந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

உயர் சாதியினருக்கு வரி வரம்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குன்னூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் 82 வயது மூத்த குடிமகன். தற்போது தி.மு.க.வில் உள்ளேன். இந்திக்கு எதிரான போராட்டம், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடியது, விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் கோரியது என பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன். இதற்காக என் வாழ்நாளில் சுமார் 250 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறேன்.

தற்போது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுகள் இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., போன்ற பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கும் அதிகாரம் அளித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.8 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள உயர் சாதியினர், கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெறும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது.

சட்டவிரோதம்

ஆனால் மற்ற வகுப்பை சேர்ந்த ஒருவரின் மாத வருமானம் ரூ.20,834 ஆக இருந்தால், அவர் வருமான வரி செலுத்தும் தகுதியை பெற்றிருப்பவராகிறார்.. ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ள தனிநபர் பொருளாதார ரீதியாகவும், நிதி ரீதியாகவும் வலிமையான நபர் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அவ்வாறு இருக்கும்போது, ரூ.8 லட்சத்துக்கு குறைவாக வருமானம் உள்ள உயர் சாதியினர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினராக கருதப்படுவார் என்ற மத்திய அரசின் அறிவிப்பு சட்டவிரோதமானது. மற்ற பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தாலே அவரை வசதியுடையவர் என்ற வரையறைக்குள் கொண்டு செல்கிறார்கள். இதனால், பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும்போது, உயர் சாதியினருக்கு மட்டும் வருமான வரம்பு ரூ.8 லட்சம் என இருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தடைவிதிக்க வேண்டும்

மொத்த வருவாயை நிர்ணயம் செய்து இடஒதுக்கீடு பெறுவதற்காக குறிப்பிட்ட பிரிவினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக வகைப்படுத்த அரசு முடிவு செய்யும் போது,​அதே அளவுகோலை மற்ற அனைத்து பிரிவினருக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த சராசரியை கையாள மத்திய அரசு தவறிவிட்டது.

எனவே வருமான வரி நிர்ணய முரண்பாடுகளை தவிர்க்க, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை ஆண்டு வருமானமாக கொண்டவர்கள் வரி செலுத்த தகுதியுடையவர்கள் என்று நிர்ணயம் செய்ததற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், பென்சன் மற்றும் பொது குறைதீர்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்