வரி செலுத்துவோருக்கு வலி தருகிறது என்கிறார், பிரதமர் இலவசங்கள் அவசியமா? பொதுமக்கள் கருத்து

வரி செலுத்துவோருக்கு வலி தருகிறது என்கிறார் பிரதமர். இந்நிலையில் இலவசங்கள் அவசியமா என்பது குறித்து தேனி மாவட்ட பொதுமக்கள் கூறிய கருத்துகளை பார்ப்போம்.

Update: 2022-10-29 18:45 GMT

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகம், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவருவதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை, பொதுமக்கள் என்ன கூறுகிறாா்கள் என்பதை பார்ப்போம்.

நாட்டின் பொருளாதார சுமை

தேனியை சேர்ந்த கல்லூரி பேராசிரியை மாலதி கூறுகையில், "இன்றைய சூழலில் இலவச திட்டங்களை விடவும், மக்களுக்கான வாழ்வாதார தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சரியாக இருக்கும். பல இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு நீண்டகாலம் பலன் அளித்ததாக தெரியவில்லை. தற்போது இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

உதவித்தொகையை விடவும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும், சிறுதொழில்கள் செய்து வருவாய் ஈட்டவும் வழிவகைகள் செய்யலாம். மீன்கள் பிடித்துக் கொடுப்பதை விடவும், மீன்களை பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது. இலவச திட்டங்களுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார சுமையை அதிகரிக்கிறது.

இதனால், இதர அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் அரசு துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தால் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். கல்வியும், மருத்துவமும் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கும் வகையிலான இலவச திட்டங்கள் தான் நீண்டகால பயனுள்ள திட்டமாக இருக்க முடியும்" என்றார்.

ஏழை மக்களுக்கு பயனுள்ளது

உப்புக்கோட்டையை சேர்ந்த இல்லத்தரசி கனகவள்ளி கூறுகையில், "ஏழை, எளிய மக்களுக்கு இலவச திட்டங்கள் பயனுள்ளது. இலவச கலர் டி.வி. கொடுக்கும் முன்பு பல வீடுகளில் டி.வி. வாங்குவது பெரும் கனவாக இருந்தது. இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்த போது அதுவும் பெண்களின் பணிச்சுமையை குறைத்தது. இதுபோன்ற திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளது. ஆனால், கொடுக்கும் பொருட்களை தரமாக கொடுத்தால் மக்கள் அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுக்கும் முன்பு அம்மி, உரல் பயன்பாடு அதிகம் இருந்தது. மிக்சி, கிரைண்டர் பழுதாகிவிட்டதால் அதற்கு பழக்கப்பட்டுவிட்ட மக்கள் தவணை முறையில் புதிய மிக்சி, கிரைண்டர் வாங்கிவிட்டு கடனை செலுத்த முடியாமல் தவித்த நிலையும் ஏற்பட்டது. எனவே இலவச திட்டங்களை நீண்டகாலம் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி மவுனிகா கூறுகையில், "வாக்குகளை கவரும் வகையிலான குறுகிய கால பயனளிக்கும் இலவச திட்டங்கள் தேவையற்றது. கல்வி, மருத்துவம் போன்றவை முழுமையாக இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு பள்ளிக்கல்வியை முடித்த மாணவ, மாணவிகளில் குறைவான எண்ணிக்கையில் தான் கல்லூரிக்கு சென்று படிக்கிறார்கள். எனவே, அரசு கல்லூரிகள் எண்ணிக்கையை அதிகரித்து அனைவரும் கல்லூரி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தி மக்களிடம் நம்பிக்கையை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளிலும் ஸ்கேன் எடுப்பது உள்ளிட்ட சில மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீடு அட்டை இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தும் நிலைமை உள்ளது. அனைத்து சிகிச்சைகளும் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யலாம். வேலைவாய்ப்புகளை உருவாக்கி, படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் சூழலை ஏற்படுத்தினால் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே வாங்கிக் கொள்வார்கள்" என்றார்.

வேலைவாய்ப்புகள்

உத்தமபாளையத்தை சேர்ந்த தொழிலாளி ராஜேஷ் கண்ணன் கூறுகையில், "இலவச திட்டங்கள் மக்களின் மீதான மறைமுக பொருளாதார சுமையை திணிப்பதாகவே உள்ளது. ஒருபுறம் இலவசம், மறுபுறம் மின்கட்டணம், பஸ் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்படுகிறது. எனவே, இலவச திட்டங்களை தவிர்த்து விடலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை கூட முறைப்படுத்த வேண்டும். மடிக்கணினி கொடுப்பதற்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம்.

இன்றைக்கு மடிக்கணினியை படிப்புக்கு பயன்படுத்தும் மாணவர்களை விட, அதை தவறாக பயன்படுத்தி வாழ்வை கெடுத்துக் கொள்ளும் மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். இலவச திட்டங்களுக்கான பொருட்கள் குறைந்த விலைக்கு தயாரிக்கப்படுவதால் அவை நீண்டகால பயன்பாட்டில் இருப்பது இல்லை" என்றார்.

தேனியை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி சிதம்பரம் கூறுகையில், "இதுவரை கொடுத்த இலவசங்களே போதுமானது. இனியும் இலவச திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக மாற்றிவிட வேண்டாம். இலவச திட்டங்கள் மக்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை குறைக்கிறது. தற்போதைய தேவை என்பது தொழில்துறையை வளமாக்க வேண்டும் என்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதாகவே உள்ளது. வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மக்களிடம் வருவாய் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரிக்கும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் பெருகும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்